ஸங்கல்பமும் ஸம்பவமும்

 EXPECTATION AND THE EVENT

 

அம்மணி அம்மாள்

AMMANI AMMAL

 

 விவேக போதினி மார்ச் 1913 [பக்கம் 351 முதல் 353 வரை.]

 

(ஆவண மூலம் தேடிக் கண்டு, நகலில் இருந்து படித்துக் கணினி அச்சு செய்து தமிழ்கூறும் நல்லுலகிற்களிப்பது  பேராசிரியர் இராஜ முத்திருளாண்டி. profrajamuthu@gmail.com

 

 


**

 ஸங்கல்பமும் ஸம்பவமும்

 EXPECTATION AND THE EVENT

 

 

ஒரு காலத்தில் ஒரு காட்டில் ஒரு சவுக்கமரமிருந்தது. அது வெகு ஸுகமாக வளர்ந்து கொண்டிருந்தது. போதுமான அளவு மழை சூரிய வெப்பம் முதலிவற்றால்  அது நன்றாய் செழித்து வளர்ந்திருந்தது. அதன் நிழலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டும் பாட்டுப் பாடி ஆடிக்கொண்டும் குதூஹலமா யிருந்தார்கள். பக்ஷிகள் அதன் கிளைகளில் கூடு கட்டி இனிமையாய் கூவிக் கொண்டிருந்தன. அணில்கள் அங்குமிங்கும் கிளைகளில் தாவி விளையாடிக் கொண்டு பார்ப்பவர்களுக்கு சுறுசுறுப்பை ஊட்டிக்கொண்டிருந்தன.

 அந்த மரத்தை சார்ந்துள்ள ஒவ்வொன்றும் ஸந்தோஷத்தோடும் சுறுசுறுப்போடு மிருந்தபோதிலும் அம்மரமானது திருப்தியா யிருக்கவில்லை.

 இப்போது இருக்கிறதை விட வேறு ஏதாவது ஒன்றாய் இருந்தால் நல்லது என்று அது விரும்பி ஏங்கிக்கொண்டிருந்தது.  முக்யமாய் அது உலகத்தில் பிரஸித்தி உள்ளதாயிருக்க ஆசைப்பட்டுக் கொண்டிருந்த்து.

 இதை அறிந்த பக்கத்தில் இருந்த ஒரு மரம் “நல்லது,, ஒரு நாள் நீ கப்பலின் பாய்மரம் ஆவாய். அதைவிட விசேஷமானது என்ன இருக்கிறது?” என்று சொல்லிற்று. ஆனால் சவுக்க மரத்திற்கு அது இஷ்டம் இல்லை..” பூ! கப்பலின் பாய்மரமா! நன்றாகச் சொன்னாய் அதைவிட விசேஷமானதாய் இருக்க எனக்கு விருப்பம் “ என்றது.

  ஒவ்வொரு வருஷமும் அளவெடுக்கிறவர்கள் அக்காட்டிற்கு வந்து உயரமான மரங்களுக்கெல்லாம் குறியிட்டுவிட்டுப் போவார்கள். பிறகு மரம்வெட்டுகிறவர்கள் வந்து அவைகளை வெட்டி கிளைகளைத் தறித்து கப்பல் செய்கிறவர்களிடம் கொண்டு போவார்கள்.

 இவைகளையெல்லாம் அந்த சவுக்க மரம் இழிவாக கருதி பார்த்துக்கொண்டிருக்கும்.

   இப்படியிருக்கு நாளில்  ஒரு நாள்  அளக்கிறவர்கள் வந்து இந்த சவுக்கு மரத்தையயே வெட்டுவதற்காக அதன் பட்டையின் மேல்  அடையாளம் வைத்துவிட்டுப் போனார்கள்.

 “ஹா!ஹா! உனக்கு கூட காலம் வந்து விட்டதா?” என்று பக்கத்தில் இருந்த மரம் கேட்டது.  

 “அவர்களுக்கு மேலிருக்கும் என் ஸாமர்த்தியம்” என்று கேலி செய்து சிரித்தது அந்த சவுக்க மரம்.  

 பிறகு அந்த அடையாளத்தை அணிலின் வாலினால் அழிக்கும்படி செய்துவிட்டது.

  அடுத்த வருஷம் தூக்கணாங்குருவிகள் திரும்பி வந்தபோது “ஓ! நீர் இன்னும் இங்கே இருக்கிறீரா?” என்று கேட்டன.

 “ஆமாம் அவர்கள் என்னை வெட்டப் பார்த்தார்கள்..நானா அவர்களுக்கு  மசிகிறவன்” என்று கர்வமாய் பதில் சொல்லிற்று.

 “ ஆனால்  அழகான கப்பல்லின்  பாயைக் கட்டிக் கொண்டு உலகத்திலுள்ள ஸமுத்திரங்களிலெல்லாம் ஆடம்பரமாய்ப் போய்க்கொண்டு, புதிது புதிதான துறைமுகங்களையும் ஜனங்களையும் பார்க்க விரும்பவில்லையா?” என்றது தூக்கணாங்குருவி.

 “இல்லை, எனக்கு விருப்பமில்லை ஸமுத்திரம் ஒரே மாதிரியாக விருக்கிறது எனக்கு அது பிடிக்கவில்லை. மனுஷ்யர்கள் என் மூலமாய் உலகத்திற்கு உபகாரம் செய்ய நான் பிரயோஜனப் படவேண்டும் என்பதே என் எண்ணம்” என்றது.

 “ புத்தி இல்லாமற் பேசுகிறீர் நீர். உம்மோடு பேச எங்களுக்கு இப்போது ஸாவகாசம் கிடையாது” என்று சொல்லி தூக்கணாங்குருவி கூடு தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தன.

  பிறகு அந்த சவுக்க மரத்தில் எண்ணம் பூர்த்தியாகும் காலம் வந்தது.  ஒரு நாள் வேறு சில மரம் வெட்டுபவர்கள் அங்கு வந்து உயரமாயும் நேராயும்  வளருகிறவைகளைப் பார்த்துப் பொறுக்கி வெட்டுவதற்கு பதிலாக கண்ட மரங்களையெல்லாம் வெட்டி சாய்க்கத் தலைப்பட்டார்கள்.

  இதைக்கண்டு தூக்கணாங்குருவிகள் தங்கள் பழைய ஸ்னேகன் ஆன சவுக்க மரத்தைப் பார்த்து “ஜாக்ரதையாயிரும். வரும்  உமக்கு இஷ்டமோ இல்லையோ?  நிச்சயமாய் இன்று உம்மை விட்டுவிடுவார்கள்”

 “ எனக்கு இஷ்டந்தான்.. உலகத்திற்கு உபகாரம் செய்ய நான் பிரயோஜனப்பட வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” என்று என்றது.

  இதைக்கேட்டு மரம் வெட்டி, “நல்லது உன் விருப்பப்படியே செய்” என்று சொல்லி கோடாலியினால் மரத்தை வெட்டி  வீழ்த்தினான்.

 “ கப்பலின் பாய் மரமாக செய்வதற்கு நீ உதவ மாட்டாய். பயப்படாதே அவ்வளவு உபயோககரமாய் செய்வதற்கு நீ தகுந்த மரம் இல்லை.. உன்னைக் காகிதம் செய்ய உபயோகப்படுத்துவார்கள்” என்று சொல்லிப் போய்விட்டான்.

  “காகிதம் என்றால் என்ன?” என்று தூக்கணாங்குருவிககள்  அதன் கிளைகளில் இருந்து அங்குமிங்கும் பறந்தோடும் போது அந்தச் சவுக்க மரம் அவைகளை கேட்டது.

  “எங்களுக்குத் தெரியாது. சிட்டுக்குருவிகளை கேட்கிறோம்”என்று  சசிட்டுகளைக் கேட்க அவைகள் “காகிதம் என்பது ஜனங்கள் அதன் மேல் எழுதி படிக்கிறார்களே வெள்ளையான வஸ்து அதுதான். முன்  கந்தைகளில் இருந்து காகிதம் செய்துகொண்டிருந்தார்கள். ஆனால் இப்பொழுது மரங்கள் மிக நயமாய் கிடைக்கிற படியால் மரத்திலிருந்து செய்கிறார்கள்” என்று தங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லின..

  “அப்படியானால் ஜனங்கள் என்னை படிப்பார்களா?” என்று அம் மரம் ஆவலோடு கேட்டது.  “ஆமாம்” என்று உத்தரஞ்  சொல்லின. 

 இதைக்கேட்டு அந்த சவுக்க மரத்திற்கு வந்த ஸந்தோஷம் அளவிட முடியவில்லை. ஸந்தோஷத்தினால்  ஸ்தம்பித்து நின்று விட்டது. இதைப் பார்த்து சிட்டுக்குருவிகள் “ இவ்வளவு ஸந்தோஷப்பட காரணம் இல்லையே என்று நினைத்து “ஐயா ஒரு நிமிஷம் பொறும் உன்னை ஸமாச்சாரப் பத்திரிக்கைக் காகிதமாக செய்யப்போகிறார்கள....புஸ்தகங்களுக்கு வேண்டிய காகிதமாக செய்யமாட்டார்கள்” என்றன.

 மரம் “”எப்படியானாலும் படிக்கத் தகுந்த ரஸமுள்ள நல்ல விஷயங்களை என் மேல் எழுதுவார்கள்  இல்லையா?”

   சிட்டுகள் “இருந்தாலும் இருக்கலாம் ஆனால் நல்ல விஷயங்கள் எழுதுவது ஸாதாரணமாய் வழக்கவமில்லை.”

  அப்பொழுது சில மனிதர்கள் அந்த மரத்தை இழுத்துக் கொண்டு போக வந்தார்கள் பாவம்! அந்த மரத்திற்கு எவ்வளவு ஸங்கடங்கள் நேர்ந்தன. முதலில் துண்டுதுண்டாய்  வெட்டி மற்றவைகளோடு சேர்த்து அரைக்கும் யந்திரத்தில் தள்ளி அதன் உடம்பில் உள்ள ரஸம் எல்லாம் நசுங்கி ஒழுக அரைத்து கூழாக்கி இன்னும் பலவித ஹிம்ஸை செய்து அதனை காகிதமாகச் செய்தார்கள்.

 ஹிம்ஸைப்படும் போது பலவித எண்ணம் எண்ணி பலன் என்ன?

 இப்போது முன்போலக் காட்டில் மலைச்சரிவில் ஸுகமாக வெய்யிலடிக்க,  பக்ஷிகள் கிளைகளில் கொஞ்ச, குழந்தைகள் நிழலில் விளையாட தான்  கம்பீரமாய் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பற்றி நினைத்தலினால்  யாது பயன்?

 “ உலகம் இப்படி இருக்கும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை” என்று அதை சொல்ல, காகித ரூபமாய் இருந்த மற்ற மரங்கள் ஒரே மனதாய் “உலகத்தைப் பற்றிச் சொல்லும் சொல்லெல்லாம் மிகையாகக் கூறப்படுகின்றன” என்று ஆமோதித்தன.

  பிறகு அதை ஐந்து மைல் நீளமுள்ள சுருளாய்ச் சுற்றி கப்பலில் ஏற்றினார்கள். அங்கே பாவம் அது தனியாயும், கப்பலில் போவதினால் உண்டாகும் தலைசுற்றல் முதலிய வியாதியாலும்  அவஸ்தைப் பட்டுக் கொண்டு ஒருவாரம் கிடந்தது.   தலைக்கு மேல் பயங்கரமான காற்று அடித்துக் கொண்டிருந்தது அந்த சப்தத்தைக் கேட்ட போது காகிதமாயிருக்கிற மரமெல்லாம் காட்டில் மனோஹரமாய் கழித்த காலத்தைப் பற்றியும், காற்றுக்குப் பயப்படாமல் தைரியமாய் தாங்கள் எதிர்த்து நின்றதையும்  பற்றி நினைத்து நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தன.  நமது (காகித ரூபமாயுள்ள) சவுக்க மரம் அந்தக் கப்பலின் பாய் மரத்தின் அடிவாரத்திலிருக்கும்படி நேரிட்டது அதன் துர்பாக்கியமே.

 அதுவுமல்லாமல் அந்த பாய் வரும் தனது பழைய ஸ்நேகன் என்றும் கண்டு கொண்டது.  அந்த பாய்மரம் நமது சவுக்க மரத்தைப் பார்த்து பாய் மரமாய் இருப்பதை விட சிறந்த வாழ்க்கை வேறு ஒன்றும் இல்லை யென்றும் எப்போதும் வெய்யலும் இரவில் நக்ஷத்திரம் சந்திரன்  முதலியவைகள் வெளிச்சம் கொடுக்கவும் புதிது புதிதான தேசங்களுக்கு வியாபார வஸ்துகளையும் மனிதர்களையும் ஏற்றிக் கொண்டு போகவும் அநேக துறைமுகங்களைப் பார்க்கவும் கூடியதாயிருக்கிறது என்றும் உலகத்துக்கு நம்மால் பெரிய உபகாரம் என்றும் தன் ஸ்தானத்தைப் பற்றி பெருமையுடனும் திருப்தியுடனும் பேசியதை கேட்டு அந்த சவுக்கமரம்   அழ ஆரம்பித்தது.

  பிறகு தனக்கு ஆறுதலுக்காக அந்த பாய் மரத்தைப் பார்த்து ” ஒரு பாய்மரம் ஸமாசாரப் பத்திரிக்கையை போல அவ்வளவு முக்கியமானது என்று நீ சொல்கிறாயா?” என்று கேட்டது.

  இதைக்கேட்ட பாய்மரம் உடலெல்லாம் அசைய இடி இடி யென்று நகைத்து “நல்லது எனக்கு அதுதான் இஷ்டமானது.  ஏன்? ஒரு ஸமாசாரப் பத்திரிக்கைக்கு ஒரு நாள்தான் ஆயுஸ்...மறுநாள் அது ஒன்றுக்கும் உபயோகப் படுவதில்லை. ஒரு பாய் மரமோ பல ஆண்டுகள் இருந்து உதவுகிறது. மறந்துவிட்டேனே இன்னொரு விஷயம் கூட அதற்கு உண்டு சில சமயங்களில் கப்பலோட்டி அதன்மேல் சார்ந்து கொள்கிறான். நினைத்துப்பார் அதனாலுண்டாகும் பெருமையை”  என்றது..

  இதையெல்லாம் கேட்டு அந்த சவுக்க மரம் அளவிட முடியாத துக்கம் கொண்டது. துறைமுகம் போய்ச் சேர்ந்ததும் கப்பலிலிருந்து காகிதச்சுருளை  எடுத்து கரையிலெறிந்தார்கள். கடைசியாய், நகரத்தில் உள்ள ஸமாசாரப் பத்திரிகையாபீஸு கிடங்கில் போய் சேர்ந்தது. காட்டில் சுகமாய் நல்ல காற்றடிக்க இருந்ததற்கும், காற்றுப் படாத கிடங்குகளில் அடைந்து கிடைப்பதற்கும் எவ்வளவு வித்யாஸம் இருக்கிறது. அங்கு கிடந்த சுருள்கள ஒன்றோடொன்று வெகு துக்கத்துடன் பேசிக் கொண்டன.

 

 

 

 

பிறகு ஒரு நாள் இரவு நமது (காகிதமாய் இருக்கிற) சவுக்க மரம் அச்சடிக்கற இடத்திற்குக் கொண்டு போகப்பட்டு அங்கு அச்சினால் மூச்சு விட முடியாமல் அமுக்கப்பட்டு பிரக்ஞையற்றுக்  பிறகு காலையில் பிரக்ஞை வந்து பார்க்கும்போது தன்மேல் எழுத்துக்கள் பதிந்திருந்ததைக் கண்டது.

 அந்தோ! அந்த சசிட்டுகள்  சொன்னது ஸரியாகிவிட்டது. ஏனென்றால் சமாஸாரப் பத்திரிக்கையில் விகார உருவங்களுடன்

“ஸுகந்த மூக்குத்தூள்”  , “சிட்டுக்குருவி லேகியம்” , “மனோரஞ்சித வாசனைப் புகையிலை”,  “ஒரு ரூபாய்க்கு பதினாறு விலை உயர்ந்த உபயோகிக்கக் கூடிய ஸாமான்” “ நூதன ரோம சங்காரி”,  “செங்கல்பட்டில் பட்டப்பகலில் கொலை”, “ மரமேறி விழுந்து மாண்டான்”  “ரெயில் மோதிக்கொண்டன” “காற்றைப் பக்ஷித்துக்கொண்டிருக்கும் யோகி” “ஆகாயத்தில் பறக்கும் குழந்தை” முதலியவற்றைத் தவிர விவேக ரஸம் பொருந்திய வார்த்தை ஒன்றாவது காணப்படவில்லை. 

 அஹோ! பரிதாபம்! இந்த மரம் தன்மேல் என்ன எழுதப்பட்டிருக்கிற தென்று அறிந்தபோது தான் பாய் மரமாக ஆகாததைப் பற்றி பட்ட வருத்தத்தை ஆதிசேஷனாலும் சொல்லத்திறமில்லை.

  இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கிற வாழ்க்கையிலிருந்துதப்பும்  கேட்கும் பக்ஷத்தில் இனி ஒரு போதும் தன் மனம் போனபடி போகிறதில்லை என்று சபதம் செய்து கொண்டது. ஆனால், ஐயோ! காரியம் மிஞ்சி விட்டது. 

 பிறகு அதையும் அதைப்போன்ற மற்றவைகளையும் கத்தரித்து மடித்து மடித்து  பனியுடன் கூடிய விடியற்காலத்தில் ரெயில் ஸ்டேஷனில் விற்பதற்காகக் கொண்டு போனார்கள்.  ஒரு மனிதன் அதை அரையணா விற்கு வாங்கி அதை முழுவதும் படித்துவிட்டு விசேஷம் ஒன்றுமில்லை என்று சொல்லி உட்காருமிடத்திற்குக் கீழே எறிந்து விட்டான்.   இன்னொருவன் அதை எடுத்துப் படித்து விட்டு வீட்டுக்குப் போகும்போது கொஞ்சம் மீன் வாங்கும்படி  நேரிட்டதால் அதை அதில் பொதிந்து கொண்டு போனான். 

 அங்கே அது இரவெல்லாம் மீன் நாற்றத்துடன் காட்டில் வஸித்ததைப் பற்றி நினைத்துக் கொண்டேன் பொழுதைப் போக்கிற்று. 

 மறுநாள் ஒரு வேலைக்காரி அடுப்புப் பிடிக்கவில்லை என்று சொல்லி மீன் பொதிந்திருந்த காகிதத்தை எடுத்து அடுப்பில் போட்டாள். ஒரு நிமிஷத்தில் புஸ் என்று எரிந்து போய் விட்டது.

  இதை வாசித்து முடித்தவுடன் இது ஒரு கதைதான் என்பதை மறந்து, அந்த மரம் அனுபவித்திருக்கக்கூடிய ஸுகத்தையும், ஆனால் வாஸ்தவத்தில் பட்ட கஷ்டத்தையும் பற்றி யோசித்துக்கொண்டிருந்த சிறுவர்களை “வாத்தியார்   சாகானா” என்று மாணவர்கள் சொல்லும்படியான அவர்கள் ஜன்ம  வைரியாகிய உபாத்தியாயர், அயர்ந்து நித்திரை செய்யும் குழந்தைகளை எழுப்பி விளக்கெண்ணை புகட்டுவது போல் “இந்தக் கதையின் கருத்து என்ன?” என்று கேட்டாராம்.

 “ நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைக்கும்” என்றோ அல்லது “விதியை வெல்லலாகாது” என்றோ அல்லது இவைகளுக்கு ஸமமான மஹத்தான தத்தவம் ஒன்றையெடுத்துப் பையன்கள் சொல்லவேண்டும் என்று இவர் அபிப்ராயம் இருந்திருக்கலாம்.

 ஆனால் கதை விஷயத்திலேயே புத்தி ஓடிக்கொண்டிருந்த ஒரு பையன் “தரித்திரம் பிடித்த தினசரி பத்திரிக்கைகளே கூடாது என்பது கருத்து” என்று உபாத்தியாயர் சற்றேனும் எதிர்பாராத பதில் சொன்னதைக் கேட்டு அவர் பிரமித்து, பேசாமல் இன்ன செய்வதென்று தெரியாமல் இருந்து விட்டாராம்.

 பதில் சொன்ன பையன் சிறுவனானதால் கேலிக்காகப் பதில் சொன்னான் என்று நாம் நினைப்பதற்கு இடமில்லை. அதையும் தவிர அவன் சொன்ன கருத்தும் தப்பும் தவறுமாய் அழுக்குப் பிடித்த காகிதத்தில் அதிக மையும் மையில்லாமலும் மாற்றிமாற்றி அச்சிடப்பட்டு நாம் படும் சிரமத்திற்குத் தக்க பலன் கொடுக்காத அனேக தினஸரிப் பத்திரிகைகளால் பீடிக்கப்பட்ட பெரியோர்களாகிய நாம் அங்கீகரிக்க கூடியதல்லவா?



  •  அம்மணி அம்மாள்

 

(அசலுக்குச் சரியான, நகல். எழுத்துச் சீர்திருத்தம் வருமுன் அச்சு வழக்கில் இருந்த எழுத்துக்களைத் தற்போது கணினிப் பதிவிட இயலவில்லை. மற்றபடி( , . — உள்பட ) எல்லாம் மூலத்தில் உள்ளது உள்ளபடியே..- இராஜ.முத்திருளாண்டி)

ஆவண மூலம் இருப்பு: ரோஜா முத்தையா நூலகம், சென்னை.

**

Comments

Popular posts from this blog