முதல் தமிழ் நாவல்
ஆதியூர் அவதானி சரிதம்
I
மாயூரம்
வேதநாயகம் பிள்ளை உரைநடையில் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்ற
நாவல்தான் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்று இதுவரை கருதி வந்திருக்கிறோம். அது
வெளிவந்தது 1879 ஆண்டு.
அதற்கு
நான்கு ஆண்டுகள் முன்பே சென்னை புரசைவாக்கம் வித்துவான்
சேஷையங்கார் என்ற பேராசிரியர் 1875
இல் எழுதிய
ஆதியூர் அவதானி சரிதம் வெளிவந்து விட்டது.
அம்மானை என்ற இலகுவான பாடல்
வடிவத்தை சென்னை புரசைவாக்கம் வித்துவான் சேஷையங்கார் என்ற பேராசிரியர்
கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் (1875) இந்துக்களுக்குள் காணப்படும்
குணா குணங்களையும், நடைகளையும் வருணித்து நாவல் என்ற பெயர் கொடுத்து "ஆதியூர்
அவதானி சரிதம்" என்ற தலைப்புடன் எழுதி வெளியிட்டார்.
நாவல்
என்ற இலக்கிய வடிவம் உரைநடையில்தான் இருக்கவேண்டும் என்பது இதுவரை
ஒப்புக்கொள்ளப்பட்டுவரும் கருத்து இது அம்மானைப் பாடல் வடிவில் இருந்தபோதிலும் இதிலடங்கிய
சங்கதிகள் பல இந்துக் குடும்பங்களில் இக்காலத்தில் உள்ளவைகள்தாம். ஆதலால் இது ‘பொய்ப்
பெயர் பூண்டு மெய்ப்பொருள் காட்டும்’ நாவல் வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு தமிழில்
வெளிவந்த முதல் நாவல் என்ற தகுதியைப் பெறுகிறது.
."நாவல்
என்பது கற்பனையின்அடிப்படையில் சமகால வாழ்கையில் காணும் மக்களையும் அவர்களுடைய
வளர்ச்சியையும் பற்றிய உரைநடை நெடுங்கதை"
என்று அதிகாரபூர்வமான ஆங்கில மொழி அகராதிகள் கூறுகின்றன.
1740 இல்
சாமுவல் ரிச்சட்சன் என்ற ஆங்கில ஆசிரியர் பமீலா என்ற பெயரில் (உரைநடையில்) எழுதிய
நாவலைத் தொடர்ந்து இதுகாறும் நாவல் என்ற வடிவம் உரைநடையில்தான் இருக்கவேண்டும்
என்ற மரபு வளர்ந்தது.
ஆயினும்
இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக நிலைபெற்றிருந்த இந்த மரபு, சென்ற 1986 ம் ஆண்டு விக்ரம் சேட்
என்ற இந்திய ஆசிரியரால் மீறப்பட்டது. " The Golden Gate " என்ற
பெயரில் இவர் எழுதி வெளியிட்ட ஆங்கில நாவல் கவிதை வடிவில் ஷேக்ஸ்பியர் போன்ற
இலக்கிய ஜாம்பவான்கள் பக்குவப் படுத்திய ஸான்னெட் (sonnett)
வடிவில் அமைந்தது.
இந்தப்
படைப்பின் உள்ளடக்கம் சமகால வாழ்வில் அமெரிக்காவில் காணப்படும் நிலையற்ற ஓர் இளைய
சமூதாயத்தைப் பற்றியது. நாவலுக்குரிய கற்பனையும் அளவும் அந்தக் கவிதைப்படைப்பில்
உள்ளதால் அது கவிதை வடிவில் இருந்தாலும் அதை ‘நாவல்’ என்று இன்றைய இலக்கிய உலகம்
வரவேற்றிருக்கிறது. இந்த நாவல் ஆங்கில உலகில் பல பரிசுகளைப் பெற்று லட்சக்கணக்கான
பிரதிகள் விற்பனையாகி பிரபலம் பெற்றிருக்கிறது. இந்திய நாட்டில் சாகித்திய
அகாதெமியும் இந்தப் படைப்பை நாவல் என்றே மதித்துப் பரிசு கொடுத்தது.ஆகவே நாவல்
உரைநடையில்தான் இருக்க வேண்டும் என்ற மரபு மாறிச்செய்யுள் வடிவிலும் எழுதப்படலாம்
என்பதை இலக்கிய உலகம் அங்கீகரித்துவிட்டது என்றே கொள்ளலாம்.
இந்த
அடிப்படையில் பார்க்கும் போது
வித்துவான் சேஷையங்காரின் ஆதியூர் அவதானி
சரிதம் தமிழில் தோன்றிய முதல் நாவல் என்று உறுதியாகக் கொள்ளலாம்.
விக்ரம் சேட் ஆங்கில நாவல் தோன்றி இருநூறாண்டுகளுக்கு பிறகு நிகழ்த்திய சாதனையை
வித்துவான் சேஷையங்கார் தமிழ் நாவல் உரைநடையில் கூடத் தோன்றுவதற்கு முன்பே
நிகழ்த்திவிட்டார். தாம் எழுதுவது நாவல்தான் என்பதை அவர் மிகவும் உறுதியாக நூலின்
தலைப்பில் குறிப்பிட்டதோடு ஆங்கிலம் தமிழ் இரண்டு மொழிகளிலும் எழுதிய
முகவுரையிலும் விளக்கியிருக்கிறார்.
சேஷையங்கார்
எழுதி வைத்த ஆங்கில முன்னுரையில் சில திராவிட அறிஞர்கள் தமிழில் நாவல்கள் எழுதும்
முயற்சியை மேற்கொண்டுருப்பதைப்பற்றியும் குறிப்பிடுகிறார். அந்த அறிஞர்கள்
உரைநடையில் எழுதினார்கள் என்பதையும் தாம் ஜனரஞ்சகமாக கவிதை வடிவில்
எழுதியிருப்பதராகவும் சொல்கிறார் ஆகவே தமிழ் நாவலின் தொடக்க காலத்தில் நாவல்
படைக்கும் முயற்சியில் முன்னோடிகள் ஈடுபட்டிருந்ததை இவர் அறிந்திருந்தார் போலும்.
ஆதியூர் அவதானி நாவலைப்பற்றி பரவலாக
அறியப்படவில்லை. தமிழ்நாவல் வரலாற்றை எழதியவர்கள் சிலர் இந்த நூலின் பெயரை மட்டும்
குறிப்பிட்டு இதன் முழுவாசகம் கிடைக்கவில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.
இதைப்பற்றிய ஓர் விமர்சனம் டாக்டர் ஜே. பார்த்தசாரதியால் (புலமை ,செப்டம்பர் 1975) இதழில்
வெளியிடப்பட்டது. அவருடைய உறவினரான போராசிரியர் மு. இராகவையங்காரிடம் ஒரு பிரதி
இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். வேறு எங்கும் நம்நாட்டில் இந்த பிரதி
கிடைக்கவில்லை.
"தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்", என்ற நூலிலும் (சிட்டி- சிவபாதசுந்தரம்,) இந்த நாவலின் விவரத்தைச் சொல்லத் தகவல் கிடைக்கவில்லை. பின்னர் சிவபாதசுந்தரம் லண்டன் சென்றபோது அங்கே பிரிட்டிஷ் மியூசியம் நூலகத்தில் ஒருபிரதி இருப்பதைக்கண்டு அதன் xerox பிரதி ஒன்றைப் பெற்று வந்தார்.
(கிரவுன் அளவில் அச்சிடப்பட்ட இந்த புத்தகம் மொத்தம் நூறு பக்கங்களைக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் சேஷையங்கார் பற்றி முழு விவரம் கிடைக்கவில்லை.
நூலின்
கடைசி பக்கத்தில் கண்டிருந்த ‘பிழை திருத்தம்’ பகுதியில் 15 பிழைகளே குறிப்பிடப்பட்டிருந்தது
என்பது அன்றைய அச்சுக்கலை வளர்ச்சிக்கு சான்றாகிறது.)
நாவலின் கதை ( சுருக்கம்) ;
பாண்டிச்சேரி அருகில் ஆதியூர் என்னும் கிராமத்தில் தொடங்குகிறது. உத்தமன் என்ற பிராமணக் குடும்பத்தலைவன் இறந்துவிட மனைவி காந்தாரியும் மகன் வினையாளன் என்பவனும் அவன் ‘சகலை’ வெட்டுணியின் வீட்டில் வாழ நேரிடுகிறது. நாளடைவில் வினையாளனின் உபநயனமும் வெட்டுணியின் தம்பி குண்டுணியின் மகள் வீரப்பிடாரியின் திருமணமும் நடக்கின்றன. குடும்பம் ஏழ்மையில் வாடுகிறது. வெட்டுணி பேராளுர் என்ற கிராமத்தில் பணியாற்றுகிறான். அவனுடைய மகனுக்கு நல்ல படிப்பு வசதி இல்லாததால் மாடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுகிறான். வினையாளன் படிப்பில் முன்னேறுவதைக் கண்ட குண்டுணியும் அவனுடைய மருமகன் அழிகண்டனும் பொறாமை கொண்டு துன்புறுத்துகிறார்கள். வெட்டுணியின் மனைவி மானவதி இதற்கு தூண்டுகோல். இறுதியில் காந்தாரியும் வினையாளனும் வெளியேறுகிறார்கள்.
சென்னைக்குச் செல்லும் வழியில் சூணாம்பேட்டுக்
கருகில் ஒருகாட்டில் வினையாளன் நோய்வாய் படுகிறான். நல்ல உள்ளம் படைத்த ஓர்
மூதாட்டி அவர்களுக்கு புகலிடம் கொடுத்து உதவுகிறாள். அவர்களிருவரும் சென்னையடைந்த
போது வேலையிழந்த வெட்டுணியும் அவனுடைய குடும்பத்தாரும் வந்து சேருகின்றனர்.
காந்தாரி அவர்களை வரவேற்று ஆதரவு தருகிறாள். இடையில் கல்வியில் முன்னேறிவிட்ட
வினையாளன் மீது அவர்கள் மீண்டும் பொறாமை அடைய பல சச்சரவுகள் ஏற்படுகின்றன.
வெட்டுணியின் துர்போதனையின் விளைவாக காந்தாரியும் தன் மகனைக் கடிந்து கொள்ள
வினையாளன் மனம்வெறுத்து வெளியேறி ஓரு வீட்டுத்திண்ணையில் சரணடைகிறான்.
அந்த
வீட்டுக்காரரின் உதவியால் சில மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பதோடு
பச்சையப்பன் பள்ளியில் கல்வி பயின்று பல பரிட்சைகளில் தேர்வடைகிறான். துரோணர் என்ற
அவனுடைய ஆசிரியர் அவனை மருத்துவக்கல்லூரியில் சேர்கிறார். உடற்கூறு பற்றிய
நுணுக்கங்களை முற்றிலும் அறிந்து கொள்ளும் திறமை கொண்ட வினையாளன் அதுமுதல் அவதானி
என்று அழைக்கப்படுகிறான்.
மருத்துவக்
கல்லூரியில் பிணங்களை அறுத்துச் சோதனை செய்யும் பணி ஒரு பிராமணன் செய்யக்கூடியதல்ல
என்று உறவினர்கள் புகார் செய்து இம்சை செய்கிறார்கள். அவதானி எவ்வளவோ எடுத்துச்
சொல்லியும் புரிந்து கொள்ளாத தாய் காந்தாரியும் வெறுப்புத் தெரிவிக்கிறாள்.
ஜாதியைவிட்டு விலக்கிவிடுவார்கள் என்ற அச்சம். இந்த இக்கட்டைத்தீர்க்கும் வகையில்,
காந்தாரி அவதானியின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறாள்.
திருமணம்
முழுவதும் பல சிக்கல்களிடையே நிறைவேறுகிறது மணமகளின் பெற்றோர்கள் பேராசையுடன்
அதிகத்தொகை கேட்கிறார்கள். இதன் விளைவாக அவதானி பெரிதும் கடன் படுகிறான். தன்னுடைய
தாயாரின் சொல்லைத்தட்ட மனமில்லாமல் மணம்புரிந்து கொள்கிறான். அதற்குப்பிறகும்
வெட்டுணியின் ஆட்கள் அவதானியைப்பற்றி பல வதந்திகளைக் கிளப்பி விடுகிறார்கள். நல்ல
வேளையாக ஒரு நண்பனின் உதவியைக் கொண்டு அவதானி மீண்டும் பணம் சம்பாதிக்கத்
தொடங்குகிறான்.
அவனுடைய
முன்னேற்றத்தைக்கண்டு சசிக்காத அந்த உறவினர்கள் அவனுடைய நலனைக் கருதுவதாகப்
பாசாங்கு செய்து மீண்டும் வந்து ஒட்டிக் கொள்ளுகிறார்கள். சச்சரவுகள் தொடர்கின்றன.
கபடமற்ற காந்தாரி அவர்களை நம்பி அவதானியின் துன்பங்களுக்கு அறியாமல்
இடங்கொடுக்கிறாள். அவதானியின் மாமியார் மகளுடன் சேர்ந்து கொண்டு அவனுக்குப் பல
கஷ்டங்களை ஏற்படுத்துகிறாள். அவனுடைய மனைவி பலாமுருடு பல குழைந்தைகளைப்
பெற்றும் இரண்டு பையன்களும் ஒரு பெண்ணும்தான் நிலைக்கின்றனர்.
உறவினரின்
கொடுமைகளைப்பற்றித் தன் தாயாருக்குப் புரிய வைக்க முடியாத நிலையில் அவதானி ஆதியூருக்குத்
திரும்புகிறான். தன்னுடைய மூத்த மகனுடன் அவன் பல இடங்களில் சுற்றி அலைகிறான்.
நிலையைச் சற்றும் புரிந்து கொள்ளாத காந்தாரி அவதானியின் மகனுக்கு உபநயனம் ஏற்பாடு
செய்கிறாள். ஆகவே அவதானி சென்னைக்கு திரும்பும் அவசியம் ஏற்படுகிறது.
சென்னையில்
தேவதத்தை என்ற க்ஷத்திரியக்குல கைம்பெண் ஒருத்தியை அவதானி சந்திக்கிறான். தன்னுடைய
நிலைமையை பயன்படுத்தி கொண்டு தனக்கு இன்னல் விளைவிக்க வருபவர்களிடமிருந்து
தப்பிக்க தேவதத்தை அவதானியின் உதவியை நாடுகிறாள் இருவருக்குமிடையே நட்பு முற்றிக்
காதலாக மாறுகிறது. தனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்ககும் நிலையில் நான் மீண்டும்
மணம் புரிந்து கொள்ளலாமா என்பதற்கு அவதானி மனுதர்ம சாஸ்திரத்தில் ஆதாரம்
தேடுகிறான். இதற்கிடையே அவதானியின் காலில் முள் குத்தியதால் ஏற்பட்ட நோய்க்கு
சிகிச்சை பெறும் பொருட்டு இருவரும் ஆதியூர் செல்கிறார்கள். அங்கு கிராமத்தவர்கள்
அவர்களை ஒழுக்கம் தவறியவர்களாக குற்றம் சாட்டி இகழ்கிறார்கள். அவதானி தேவதத்தையை
சென்னைக்கு அனுப்பிவிட்டு தனது நோய் தீர்ந்த பிறகு அவளுடன் சேர்ந்து இருவரும்
ஆங்கிலம் வடமொழி இலக்கியங்களைப் படித்த வண்ணம் இணைந்து வாழ்கிறார்கள்.
கொடுமையே
உருவான பழைய உறவினர்கள் மீண்டும் அவர்களைப் பழித்து பல வதந்திகளைப்
பரப்புகிறார்கள். காந்தாரியும் அவர்களை நம்பி அவனை வெறுக்கிறாள். தேவதத்தையை
வெளியேற்றுவதற்காகக் காந்தாரி அவதானியுடைய மகள் திருமணத்தை நடத்த முற்படுகிறாள்.
ஆனால்,
திருமணவீட்டிலே ஒரே களேபரம். ஒருவருக்கொருவர் சண்டையில் எதுவும் நடக்கவில்லை.
அச்சமயத்தில் திறமைசாலியான தேவதத்தையை வரவழைத்து அவதானி அவள் கையில் நிர்வாகப்
பொறுப்பைக் கொடுக்கிறார். அங்கொருவரும் இங்கொருவருமாகப் பிரிந்து கிடந்த தாயாதியர்
ஆச்சரியப்படும்படி திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கின்றன. எல்லோரும்
மகிழ்ச்சியோடு ஒன்று சேருகிறர்கள். ஆயினும் ஊரிலே தேவதத்தையின் உறவு வைப்பாட்டி
என்று கருதுவதைத் தடுக்க அவதானி அவளை முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பி
அனுகூலர் என்ற தமது உற்ற நண்பரின் உதவியை நாடுகிறார். அவரும்-
"கனமாம் வினாயகரை கண்டு
கொணர்ந்திடுவேன்
சாத்திரங் கற்ற சதுரரைத்தானழைப்பேன்"
என்றுரை தந்தவரும் ஈச்சுரப் பட்டரெனும்
நன்றாய் மறையுணர்ந்த நல்லவர் கையாலே
வேதியர் கையால் விவாகச் சடங்கிழைத்தே
ஆதியூராரும் அரிவை கழுத்தினிலே
மங்கலமாகு நல்ல மாங்கிலியம் தான் முடித்தார்
திங்களு ரோகிணிபோல் சேர்ந்தவர் தாமிருந்தார்.
இந்தப் புரட்சிகரமான முடிவுதான் இக்கதை நாவலின் புதுமை. கலப்பு மணமும் விதவா விவாகமும் ஒன்று சேர்ந்த புதுமையை நாம் சற்றும் எதிர்பார்க்காத காலத்தில் 1875 இல் ஆசிரியர் சேஷையங்கார் துணிந்து செயல்படத்திய விந்தையைப் பார்க்கிறோம்.
இதில்
அதிசயம் என்ன வென்றால் முதலில் வாயில்வந்தபடி திட்டிய தாயாரே ஒப்புக்கொள்கிறாள்.
சங்கதி
எங்கும் தழைத்துப் பரவியது
அங்குறு தாயும் அறிந்துள்ளே யலுற்றாள்
பேதை மதியாலே பிள்ளைமேல் தண்டெடுத்தோம்
ஏதினிச் செய்வோம் இணங்கி நடக்கவேண்டும்
என்று சொல்லி நடந்ததை ஏற்றுக்
கொண்டது மாத்திரமல்ல கலப்பு மணமும் கைம்பெண் விவாகமும் இனிமேல் நிலைத்து நிற்க
வேண்டுய கொள்கைதான் என்று முடிவு கட்டியதுதான் நாவலுக்கு முத்தாய்ப்பாக அமைகிறது.
தாயார் புதிய நிலைமையை ஏற்றுக் கொள்வது மாத்திரமல்ல. அதற்கு உதாரணத்தையும்
கூறுவதுதான் புதிய திருப்பமாக படுகிறது. தாயார் சொல்கிறாள்:
நெல்வேலிச்
சேஷையங்கார் நேயமுள்ள புத்திரிக்குச்
சொல்லு மறுமணந்தான் தோஷமில்லை என்று செய்தார்
கைம்பெண் விவாக மிந்தகாலத்தி லுண்டாச்சு
அம்புவி எங்கும் அதுவே தலையெடுக்கும்
காலத் தியற்கைதனை கட்ட முடியாது
கோல மகனுமந்தக் கொம்பனையைத் தான் மணந்தான்
சாதிவிட்ட சாதியென்று தள்ளலினி வாய்க்காது
புவனத் திதுவும் புதுமையாய் விட்டதிப்போ.
விதவை
மறுமணத்தைப்பற்றி இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான் பாரதியார், மாதவையா வா.ரா.
முதலியோர்கள் பேச முன்வந்தார்கள். ஜி சுப்ரமணிய ஐயர் தயங்கித் தயங்கி தன்மகளுக்குப்
பம்பாயில் திருமணம் நடத்தினார்.
ஆனால்
1875 இல்
வித்வான் சேஷையங்கார் "கைம்பெண்விவாகமிந்தக் காலத்திலுண்டாச்சு"
என்றும் சாதிவிட்ட சாதி என்று தள்ளலினி வாய்க்காது. என்றுங் கட்டியங் கூறுவதோடு
"அம்புவி எங்கும் அதுவே தலை எடுக்கும்" என்றும் அறுதியிட்டு கூறிய
வார்த்தைகள்தான் இந்த நாவலின் பண்பு.
(இரண்டாம் பகுதி வரும்)
சுவையான திருப்பங்கள், காலத்தில் முன்னோடியாக விளங்குகிறது.
ReplyDeleteநன்று.நன்றி.
ReplyDelete